மூதூர்,கிண்ணியா கிராமங்கள் வெள்ளத்தில்
February 6, 2011
தொடர்ந்து காட்டு வெள்ளம் அதிகரித்து வருவதால் கிண்ணியா,மூதூர் பகுதிகளைச் சேர்ந்த பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.வெள்ள நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் சேரும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.கிண்ணியாவில் 19 நலன்புரி நிலையங்களில் 2327 குடும்பங்களைச் சேர்ந்த 8634 பேர் தங்கியுள்ளனர்.இவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலகம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.இதனை விட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நண்பர்,உறவினர் வீடுகளில் தங்கியுள்ளோருக்கும் உலர் உணவு நிவராணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் மூலம் வழங்கப்படுகின்றது.
கிண்ணியாவில் 7 பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.குட்டிக்கராச்சி,குறிஞ்சாக்கேணி ஆகிய பாலங்களுக்கு மேல் மூன்றரை அடிக்கு வெள்ள நீர் பாய்கின்றது.கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தைவிட தற்போது அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.குட்டிக்கராச்சி,குறிஞ்சாக்கேணி ஆகிய பாலங்களில் கிண்ணியா நகரசபை பிரதேச சபை ஆகியவற்றின் உழவுஇயந்திரங்கள் மூலம் பொதுமக்கள் பாலத்தைக் கடந்து வருகின்றனர்.
பூவரசந்தீவு,சம்மாவச்சதீவு ஆகிய இரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் முற்றாக நீரினால் துண்டிக்கப்பட்டுள்ளன.இதனால் அப்பகுதியில் படகுச் சேவை கடற்படையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இம்மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் படகுகள் மூலமே எடுத்துச் செல்லப்படுகின்றன.கிண்ணியா கால்நடை வைத்திய அதிகார அலுவலகம்,ஜம் இய்யத்துல் உலமா அலுவலகம் என்பனவும் நீரில் மூழ்கியுள்ளன.ஈச்சத்தீவு,ஆலங்கேணி,இடிமண்,குட்டிக்கராச்சி,எகுத்தார் நகர்,றஹ்மானியா நகர்,மாஞ்சோலைசேனை போன்ற கிராம உத்தியோத்தர் பிரிவுகளில் பெரும்பாலான வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது.
மூதூரைப் பொறுத்தவரை தரை மார்க்கப் போக்குவரத்து முற்றாகத் தூண்டிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையிலிருந்து கடல் மார்க்கமான போக்கு வரத்து சேவைமட்டுமேஇடம்பெறுகிறது.கடல் பெரும் கொந்தளிப்பாக இருப்பதால் மிகச் சிரமத்துக்கு மத்தியிலேயே கப்பல் சேவை இடம்பெறுகின்றது.மூதூர் துறையில் கப்பலை அணைக்கமட்டும் 30 நிமிடங்களுக்கு மேலே நேரம் எடுக்கின்றது.கடல் மட்டம் உயர்ந்து காணப்படுவதால் காட்டு வெள்ளம் கடலுக்குள் செல்ல முடியாத நிலை உள்ளது.இதனால் மூதூரின் இறால்குழி,ஷாபி நகர்,ஆலிம் சேனை,பாட்டாளிபுரம்,பெரிய பாலம்,தக்வா நகர்,அறபா நகர்,பாரதிபுரம்,ஜின்னாநகர் ,ஆஷாத் நகர் போன்ற கிராமங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.இதனால் மூதூரின் பெரும்பாலான மக்கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலும் நண்பர்கள்,உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
இதேவேளை மூதூரில் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.அரிசி கையிருப்பில் இல்லை.பல பேக்கரிகள் நீரில் மூழ்கியுள்ளதால் பாண் பெறக்கூடிய நிலையில் இல்லை.மூதூர் சந்தைக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.இதனால் திருகோணமலையிலிருந்து பாண் அனுப்புவதற்குரிய ஏற்பாடுகளை மாவட்ட செயலகம் மேற்கொண்டுள்ளது.இதேநிலை நீடிக்குமாயின் மூதூர் மக்கள் பெரும்பாலானோரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும் அதுவும் பெரும் சிரமமான காரியமாகும் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.இதேவேளை திருகோணமலை மாவட்டத்தின் மொத்த சனத் தொகையில் 75 வீதத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்ற