எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கிறோம். மூதூர் ஆன்லைன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது...

வெள்ளி, பிப்ரவரி 25, 2011

islam

நபிமார்கள் வரலாறு


தொகுப்பாளரின் முன்னுரை


மனிதனின் சிறப்பு


மேலும், ஆதமுடைய மக்களைத் திட்டமாக நாம் கண்ணியப்படுத்தினோம்: கரையிலும், கடலிலும் நாம் அவர்களை சுமந்து செல்(லும்படி செய்)கின்றோம், நல்லவற்றிலிருந்து அவர்களுக்கு நாமே உணவளிக்கின்றோம். நாம் படைத்தவற்றில் அனேகவற்றை விட(தகுதியில்) நாம் அவர்களை மகிமிக மேன்மையாக்கியும் வைத்திருக்கின்றோம் (17:70)


நிச்சியமாக நாம் மனிதனை மிக அழகான அமைப்பில் படைத்திருக்கின்றோம் (95:4)


அவன் எத்தகையவன்னென்றால் பூமியிலுள்ள யாவற்றையும் உங்களுக்காக அவன் படைத்தான் (2:29)


அவன் தான் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரைச் சிலரைவிடப் பதவிகளில் உயர்த்தினான் - நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் விரைவானவன். மேலும் அவன் நிச்சயமாக மன்னிப்பவன்; மிக்க கருணையுடயவன்.(6:165)


ஆறு அறிவு


பார்த்தல், கேட்டல், தொடுதல், நுகர்ந்தறிதல், ருசித்தறிதல், பகுத்தறில் (கேட்டல், கேட்டதை எடுத்துச் சொல்லும் அறிவு ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டு அறிந்துக்கொள்ளுதல்)


அவனே அவனுக்கு (அவன் பேசும் மொழியின்) விளக்கத்தை கற்றுக் கொடுத்தான் (55:4)


இத்தனைச் சிறப்புகள் கொடுக்கப்பட்டுள்ள மனிதன் நேர்வழியில் நடக்கிறானா? இல்லையா?


இல்லை! இந்த அறிவை தவறாகப் பயன்படுத்துகிறான். உதாரணமாக மது அருந்துதல் லாபமா? அல்லது நஷ்டமா?. நஷ்டம்தான் என்று தெரிந்துக் கொண்டே குடிக்கின்றான் பகுத்தறிவு சொல்கிறது கெடுதி என்று, ஆசை (மனோ இச்சை) சொல்கிறது குடி என்று.


சிறந்த மனிதனாக வாழ அறிவு மட்டும் போதுமா?


போதாது, திருடுகின்றான் அது தவறு என்று அறிந்திருந்தும் அறிவைப் பயன்படுத்தி அதை நியாப்படுத்துகின்றான். அறிவைப் பயன் படுத்தி மோசடி (கலப்படம்) செய்கின்றான்.


உதாரணமாக ஹர்ஷத் மேத்தா என்பவன் 3000 கொடி ரூபாய் மோசடி செய்தான் எவ்வாறு செய்தான் தன் அறிவைப் பயன்படுத்திச் செய்தான். இந்த அறிவை நல்வழியில் பயன்படுத்திய நல்லோர்களும் இருக்கின்றார்கள். மனிதன் அறிவைப் பயன்படுத்தி தவறான வழியில் செல்லாமல் இருக்க ஒரு கடிவாளம் தேவை.


தூதர்கள் வருகையின் அவசியம்


கையில் எதையாவது மறைத்து வைத்துக் கொண்டு என்ன? என்று கேட்டால் தெரியாது. ஒருமனிதன் மற்ற மனிதனின் மனதில் உள்ளது என்ன என்பதை அறியமுடியாது ஒரு கணவன் தன் மனைவியின் மனதில், தாய் மகன் மனதில், தந்தை மகன் மனதில் என்ன உள்ளது என்பதை அறியமுடியாது. இப்படி இருக்க படைத்த ரப்புல் ஆலமீன் என்ன நாடுகின்றான் என்பதை எவ்வாறு அறியமுடியும்? அதற்குத்தான் தூதர்கள் தேவை.


மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், ''அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்'' என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள். (16:36)


தூதர்களின் நோக்கம்


மனிதர்களை நேர்வழிப்படுத்த, அல்லாஹ் நாடியதை அறிந்து கொள்ள, மக்கள்(மறுமையில்) காரணம் சொல்லாமல் இருக்க தூதர்களை அல்லாஹ் மனிதர்களிலிருந்தே தேர்ந்தெடுக்கின்றான். அவர்களும் மனிதர்களே, அத்தூதர்களும் கஷ்டங்களை அனுபவித்தனர், ஆட்சி அதிகாரம் பெற்றனர், சமூகத்தினரால் சமூக பகிஷ்காரம் செய்யப்பட்டனர், ஏன்! கொலையும் கூட செய்யப்பட்டார்கள்.


(நபியே!) நீர் சொல்வீராக ''நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.'' (18:110)


தூதர்களை ஏற்கமறுத்தது


மனிதர்களிடம் நேர்வழி (காட்டி) வந்த போது, ''ஒரு மனிதரையா அல்லாஹ் (தன்) தூதராக அனுப்பினான்'' என்று கூறுவதைத் தவிர அவர்கள் ஈமான் கொள்வதை வேறெதுவும் தடுக்கவில்லை. (17:94)


மலக்குகளை அனுப்பிவைத்தாலும் மனித உருவத்தில் தான் (வருகிறார்கள்)


நம் தூதரை ஒரு மலக்காகவே அனுப்புவதாயினும் (அவர்கள் மலக்கை காணும் சக்தியில்லாதவர்கள் ஆதலால்) அவரையும் நாம் மனித உருவத்திலேயே ஆக்கி(அனுப்பி)யிருப்போம், (அப்பொழுதும்,) அந்த இடத்தில் அவர்கள் (இப்பொழுது) குழம்பிக் கொள்வது போல் (அப்பொழுதும்) நாம் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்போம்.(6:9)


இமாம் முஸ்லிம் அவர்களின் தொகுப்பில் வந்த உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்ற ஹதீஸின் சுருக்கத்தை பாருங்கள்:


ஒரு நாள் நபி(ஸல்) அவர்களோடு அமர்ந்து இருந்தோம் அப்பொழுது அங்கு ஒரு மனிதர் வந்தார்(தோன்றினார்). அவர் வெண்ணிற ஆடையை அணிந்து இருந்தார். மிகவும் கருமையான முடிகளை உடையவராகவும், எந்த பிரயாண களைப்பும் (அடையாளமும்) அற்றவராகவும் இருந்தார். நாங்கள் யாரும் அவரை அறிந்திருக்கவில்லை. அவர் நபி(ஸல்) அவர்களுக்கு மிக அருகில் வந்து தனது முழங்கால்கள் நபி(ஸல்) அவர்களுடைய முழங்கால்களோடு படுமாறு அமர்ந்து. தனது கைகளை அவரது தொடைகளின் மீது வைத்தவாறு யாமுஹம்மத் ''இஸ்லாம் என்றால் என்ன? என்று எனக்கு அறிவிப்பீராக'', என்று கேட்டார்?.


அதற்கு நபி(ஸல்) அவர்கள் இஸ்லாம் என்பது வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வை தவிர (வேறு) யாரும் இல்லை என்றும், முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவதும். தொழுகையை நிறை வேற்றுவதும், ஜகாத் கொடுப்பதும் ரமலானில் நோன்பு நோற்பதும், பிரயாணத்திற்கான சக்தி பெற்றவர்கள் ஹஜ் செய்வதும் ஆகும் என்று கூறினார்கள். அப்பொழுது அந்த மனிதர் நீர் உண்மையே கூறினீர். என்று சொன்னார்.


நாங்கள்லெல்லாம் அவர் கேள்வி கேட்பதையும் பின்பு அதை உறுதிப்படுத்துவதையும் கண்டு ஆச்சர்யம் அடைந்தோம். பிறகு அவர் ''ஈமான் என்றால் என்னவென்று கூறுவீராக?'' என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ஈமான் என்பது அல்லாஹ்வையும், அவனது மலக்குகளையும் (வானவர்களையும்), அவனது வேதங்களையும், அவனது தூதர்களளையும், இறுதி நாளையும், நன்மை தீமையாவும் விதிப்படி நடக்கிறது என்று நம்புவதும் ஆகும் என்க் கூறினார். அதற்கு அவர் நீர் உண்மையை கூறினீர் என பதில் அளித்துவிட்டு. ''இஹ்ஸான் என்றால் என்ன? என அறிவீப்பீராக'' என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இஹ்ஸான் என்றால் நீர் அல்லாஹ்வை காண்பது போன்று வணங்குவதாகும். நீர் பார்க்கவில்லை என்றாலும் அவன் உம்மை பார்த்துக் கொண்டிருக்கிறான். என பதில் கூறினார். பின்னர் அவர் 'அஸ்'ஸா என்பது (மறுமை நாள் அந்த நேரத்தைப்) பற்றி அறிவீப்பீராக? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இது விசயம் குறித்து கேள்வி கேட்கப்படுபவரைவிட, கேட்பவர் அதிகமாக அறிந்தவர் என்று கூறினார். பின்னர் அவர் அதற்கான அடையாளங்களை கூறுவீராக? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அடிமை பெண் தனது எஜமானியை பெற்றெடுப்பாள், காலணி இல்லாமல் வறுமையான (ஏழ்மையான) ஆடு மேய்த்துக் கொண்டிருப்பவர்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டுவதில் போட்டி போடுவார்கள் என்றும் கூறினார்கள். மேலும் வந்தவர் போனபின் நபி(ஸல்) அவர்கள் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு உமரே! கேள்வி கேட்டவர் யாரென்று தெரியுமா? என்று கேட்டார்கள், அல்லாஹ்வும் அவன் தூதருமே அறிவார்கள் எனக் கூறினேன். பின்பு நபி(ஸல்) அவர்கள், அவர்தான் ஜீப்ரயீல் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை கற்றுக் கொடுப்பதற்காக வந்தார்கள் எனக் கூறினார்கள்.


அல்லாஹ் எதை விரும்புகிறான்?


தன்னுடைய தூதுச் செய்தியை மனிதர்களுக்கு அறிவிக்க மனிதர்களையே தேர்ந்தெடுக்கிறான். மலக்குகளை அனுப்பிவைத்தாலும் மனித உருவிலேயே அனுப்பிவைக்கிறான். மேலும் மனிதர்கள் இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்பதைத் தன் அருள் மறையில் குறிப்பிடுகிறான்.


புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை) களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு, போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்). (2:177)


நபிமார்களின் பணி


1. சமூகத்தைச் சீர்படுத்துவதற்காக:


அல்லாஹ்வின் செய்தியை பெற்றுக் கொண்டு கூட்டாமல் குறைக்காமல் அப்படியே கூறுவது.


மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், ''அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்'' என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள். (16:36)


2. வஹீ பெற்று அறிவிப்பது:


(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்; ''நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்'' என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை. (21:25)


3. நல்வழிபடுத்துவது:


''நீங்கள் அல்லாஹ்வை அன்றி (வேறெவரையும், எதனையும்) வணங்காதீர்கள். நிச்சயமாக நான் நோவினை தரும் நாளின் வேதனையை உங்களுக்கு அஞ்சகிறேன்'' (என்று கூறினார்). (11:26)


4. நன்மாராயம் கூறுபவர், அச்சமூட்டி எச்சரிக்கை செய்தல்


இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். (34:28)


பணியின் விளைவு


செய்தியை சொன்னவுடன் ஏற்றுக் கொள்ளவில்லை பரிகாசம் செய்தார்கள், பொய் என்று கூறினார்கள், சூனியம் என்று கூறினார்கள், கவிஞன் என்று கூறினார்கள், துன்புறுத்தினார்கள், கொலையும் செய்தார்கள்.


இன்னும், (நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னர் வந்த தூதர்களும் (இவ்வாறே) பரிகசிக்கப் பட்டார்கள் - ஆனால் அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த (வேதனையான)து அவர்களை சூழ்ந்துக் கொண்டது. (21:41)


நபிமார்கள் பணி எத்திவைப்பது மட்டுமல்ல (பரிகாசம், பொய்பித்தல், விரட்டி அடித்தல், கொலை செய்தல் போன்ற) இன்னல்களை சகித்து பொருத்துக் கொள்ளுதலும் ஆகும்.


நபிமார்களை ஏற்றுக்கொண்ட மற்றும் ஏற்றுக்கொள்ளாதவர்களின் நிலை:


ஆகவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும், நம்முடைய அருளைக்கொண்டு காப்பற்றினோம்; நம் வசனங்களைப் பொய்யெனக்கூறி, நம்பிக்கை கொள்ளாமல் இருந்தவர்களை நாம் வேரறுத்து விட்டோம். (7:72)


அப்போதும் அவர்கள் அவரைப் பொய்யரெனவே கூறினர்; எனவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் (ஏற்றிக்) காப்பாற்றினோம்; இன்னும் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறியவர்களை (பிரளயத்தில்) மூழ்கடித்தோம்; நிச்சயமாக அவர்கள் (உண்மை காண முடியா) குருட்டுக் கூட்டதாராகவே இருந்தனர். (7:64)


நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்து 10 ஆண்டுகள் கழிந்த பின்னர் ஷவ்வால் மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் மக்காவை அடுத்துள்ள தாயிஃப்புக்கு ஏகத்துவத்தை எடுத்துக் கூறப் புறப்பட்டார்கள் மூடப்பழக்க வழக்கங்களில் மூழ்கிப் போயிருந்த தகீக் (அப்துயலீல்), மஸுத், ஹபீப் தோத்திரத்தாருக்கு நபிகளாரின் அழைப்புப்பணி செவிடன் காதில் ஊதிய சங்கானது. நபிகளாரை அவர்கள் சொல்லாலும் செயலாலும் தாக்கினர். ஹதீஸ்களில் இதனைக் காணும் போது உஹதுப் போரில் நபி(ஸல்) தாக்கப்பட்டு நிராகரிப்போரால் நிகழ்ந்த வேதனையைக் காட்டிலும் தாயிஃப் நகர மாந்தர்கள் இழைத்த கொடுமைகளின் வேதனை அதிகமாய் இருந்தது. பத்து நாட்கள் அழைப்புப் பணி அந்நேரத்தில் பயனற்றதாய் இருந்தது.


நபிகளாரை ஆதரிக்கும் கோத்திரத்தார்களுடன் எந்தவித வியாபார, கொடுக்கல் வாங்கல் திருமணம், பேச்சுவார்த்தைகள் எதுவும் முஹம்மது(ஸல்) தம் கொள்கையை விட்டு விடும் வரை அல்லது அவர் கொல்லப்படும் வரை வைத்துக் கொள்ளக் கூடாது என இணைவைப்பாளர்கள் தீர்;மானித்து பகீத் பின் அமீர் பின் ஹாஷிம் என்பவன் கைப்பட எழுதிய தீர்மானம் கஃபாவில் கட்டி தொங்க விடப்பட்டது விளைவு நபிகளாரை(ஸல்) அரவணைத்த அனைவரும் சமூகப் பகிஷ்காரம் செய்யப்பட்டனர். அபூதாலிபின் ஹாஷிஃப் கணவாய் என்ற இடத்தில் நபிகளின் அரவணைப்பாளர்கள் குடியேறினர். நபிகளுக்கு நபித்துவம் கிடைத்த ஏழாம் ஆண்டில் முஹர்ரமில் துவங்கிய இச்சமூகபகிஷ்காரம் மூன்றாண்டுகள் தொடர்ந்து நீடித்தது. பசிக்கொடுமையால் இலைதழைகளையும் மிருகங்களின் தோலையும் உண்டனர். குழந்தைகளின் அழுகுரல் வெகு தூரம் வரை எட்டியது. பசியின் பரிதாபத்தை கேள்வியுற்ற இளகிய மனங்கொண்டோர் உதவிய சில சந்தர்ப்பங்களைத் தவிர பயங்கரப் பஞ்சமே மூன்றாண்டுகால பகிஷ்கார வாழ்வில் தாண்டவமாடியது. இந்நிலையிலும் நபிகளாரின் ஏகத்துவப் பிரச்சாரம் ஓயவில்லை. தம்மைச்சார்ந்திருந்த மக்களிடம் ஓரிறைக் கொள்கை எடுத்துரைக்கப்பட்டது.


யாரை தூதர்களாக அனுப்பி இருக்கிறான்


(நபியே!) உமக்கு முன்னரும் மானிடர்களையே அன்றி (வேறெவரையும்) நம்முடைய தூதர்களாக நாம் அனுப்பவில்லை அவர்களுக்கே நாம் வஹீ அறிவித்தோம். எனவே ''(இதனை) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (நினைவுபடுத்தும்) வேதங்களுடையோரிடம் கேட்டுத் (தெரிந்து) கொள்ளுங்கள்'' (என்று நபியே! அவர்களிடம் கூறும்) - (21:7)


சில ஆதாரங்களை கொடுத்து அனுப்பினான்


இவர்களுக்குத்தான் நாம் வேதத்தையும், அதிகாரத்தையும், நபித்துவத்தையும் கொடுத்தோம்;. (6:89)


எல்லா நபிமார்களின் பெயர்களையும் குர்ஆனில் குறிப்பிடப்படவில்லை


திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்; இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர் (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கு (அதிகாரமும்) இல்லை ஆகவே அல்லாஹ்வுடைய கட்டளை வரும் போது, (அனைவருக்கும்) நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும்; அன்றியும், அந்த இடத்தில் பொய்யர்கள் தாம் நஷ்டமடைவார்கள். (40:78)


அல்லாஹ் நபிமார்களின் வரலாற்றைக் கூறுவதன் நோக்கம்


(நம்) தூதர்களின் வரலாறுகளிலிருந்து (இவை) யாவற்றையும் உம் இதயத்தைத் திடப்படுத்துவதற்காக உமக்குக் கூறினோம். இவற்றில் உமக்குச் சத்தியமும் நல்லுபதேசமும், முஃமின்களுக்கு நினைவூட்டலும் வந்து இருக்கின்றன. (11:120)


(நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது.(12:111)


நாம் நாடியிருந்தால், நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்; எனினும் அவன் இவ்வுலக வாழ்வை(யே சதமென) மதித்து, தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான்; அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது - இதுவே நம் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கு உதாரணமாகும் - ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறும் பொருட்டு (இத்தகைய) வரலாறுகளைக் கூறுவீராக.(7:176)


நபி மார்களை அனுப்பும் முன் அவர்களுடன் அல்லாஹ் உடன்படிக்கை செய்கின்றான்.


(நபியே! நம் கட்டளைகளை எடுத்துக் கூறுமாறு) நபிமார்(கள் அனைவர்)களிடமும், (சிறப்பாக) உம்மிடமும்; நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய குமாரர் ஈஸா ஆகியோரிடமும் வாக்குறுதி வாங்கிய போது, மிக்க உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் நாம் வாங்கினோம்.(33:7)


எனவே உண்மையாளர்களாகிய (அத்தூதர்களிடம்) அவர்கள் (எடுத்துக் கூறிய தூதின்) உண்மையை பற்றி அல்லாஹ் கேட்பான்; (அவர்களை நிராரித்த) காஃபிர்களுக்கு அல்லாஹ் நோவினை தரும் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றான்.(33:8)


மறுமையில் நபி நூஹ்(அலை) அவர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்கள், இதோ வந்துவிட்டேன் என் இறைவா! கட்டளையிடு காத்திருக்கிறேன் என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம் (நமது செய்தியை மக்களுக்கு) நீங்கள் எடுத்துரைத்துவிட்டீர்களா? என்று இறைவன் கேட்பான். அவர்கள், ஆம் (எடுத்துரைத்துவிட்டேன்) என்று சொல்வார்கள். அப்போது அவர்களுடைய சமுதாயத்தாரிடம் உங்களுக்கு இவர் (நம் செய்தியை) எடுத்துரைத்தாரா? என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், எங்களிடம் எச்சரிப்பவர் எவரும் வரவில்லை என்று சொல்வார்கள். அப்போது அல்லாஹ், உங்களுக்கு சாட்சியம் சொல்கின்றவர் யார்? என்று (நூஹ் நபியிடம்) கேட்க, அவர்கள் முஹம்மதும் அவருடைய சமுதாயத்தினரும் என்று பதிலளிப்பார்கள். அவ்வாறே அவர்களும் நூஹ்(அலை) அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு இறைச்செய்தியை) எடுத்துரைத்துவிட்டார்கள் என்று சாட்சியம் அளிப்பார்கள். மேலும் இறைத்தூதர் உங்களுக்கு சாட்சியாக இருப்பார். இதையே இவ்வாறே உங்களை நாம் நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்கு சான்று வழங்குபவர்களாகவும் இதை;தூதர் உங்களுக்கு சான்று வழங்குபவராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக எனும் (2-143) இறைவசனம் குறிக்கின்றது. நடுநிலையான (வசத்) என்பதற்கு நீதியான என்று பொருள். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி


அல்லாஹ் தூதர்களுடன் பேசும் முறை


1. வஹீ மூலம் 2. திரைக்கு அப்பால் 3. தூதர் அனுப்பி அவர் மூலம் அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹீயாகவோ அல்லது திரைக்கப்பால் இருந்தோ அல்லது தான் விரும்பியதைத் தன் அனுமதியின் மீது வஹீயை அறிவிக்கக் கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அன்றி (நேரிடையாகப்) பேசுவதில்லை நிச்சயமாக அவன் உயர்ந்தவன்; ஞானமுடையவன். (42:51)


நபிமார்களின் (முஃஜிஸாத்) அற்புதங்கள்


நபி மார்களின் பெயர்கள்




அற்புதங்கள் (முஃஜிஸாத்)


சுலைமான் (அலை)




காற்று, ஜின்களை கட்டுப்படுத்திக் கொடுத்திருந்தான்;, எறும்பு மற்றும் பறவைகளுடன் பேசும் பாஷையை கற்றுக் கொடுத்திருந்தான்.


ஸாலிஹ்(அலை)




சூல் கொண்ட சாம்பல் நிற ஒட்டகம்


மூஸா(அலை)




அக்குளில் கைவைத்து எடுத்தால் கை பிரகாசம் அடைவது, கைத்தடி பாம்பாக மாறுவது, கடல் பிளந்தது, பாறைகளிலிருந்து 12 நீர் ஊற்றுக்கள் மற்றும் 'மன்னு ஸல்வா' (என்னும் மேன்மையான உணவுப் பொருள்கள்)


ஈஸா(அலை)




பிறவிக் குருடு, வெண்குஷ்டம் போன்றவற்றை குணப்படுத்துதல், களிமண் பறவைக்கு உயிர் கொடுத்தது, உணவு மறவை


நபி(ஸல்)




குர்ஆன்


நபிமார்களின் உடலை மண்தீண்டாது (சுருக்கம்)


வெள்ளிக்கிழமை எனக்கு அதிகமாக ஸலவாத்து சொல்லுங்கள் அது எனக்கு எடுத்துக்காட்டப்படும் என்று சொன்னவுடன், மண்ணோடு மண்ணாக நீங்கள் ஆனபிறகுமா? என்று கேட்டதற்கு, நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் நபிமார்களின் உடலை மண் தீண்டாது.


குர்ஆனில் குறிப்பிட்டுள்ள நபிமார்களின் பெயர்கள்


1. ஆதம்(அலை)


2. நூஹ்(அலை)


3. இத்ரீஸ்(அலை)


4. ஹுத்(அலை)


5. ஸாலிஹ்(அலை)


6. இப்ராஹீம்(அலை)


7. இஸ்மாயில்(அலை)


8. இஸ்ஹாக்(அலை)


9. லூத்(அலை)


10. ஷுஐப்(அலை)


11. யாகூப்(அலை)


12. யூசுஃப்(அலை)


13. அய்யூப்(அலை)


14. யூனூஸ்(அலை)


15. மூஸா(அலை)


16. இல்யாஸ்(அலை)


17. தாவூத்(அலை)


18. சுலைமான்(அலை)


19. ஈஸா(அலை)


20. ஜக்கரியா(அலை)


21. யஹ்யா(அலை)


22. ஹாரூன்(அலை)


23. அல்-எஸாவு(அலை)


24. துல்கிப்லு(அலை)


25. நபி முகம்மது (ஸல்)


இத்ரீஸ்(அலை)


குர்ஆனில் இரண்டு இடத்தில் இத்ரீஸ்(அலை) அவர்களைப் பற்றி குறிப்பிடப்படுள்ளது.


இத்ரீஸ்(அலை) அவர்கள் வாய்மையுள்ள நபியாகத் திகழ்ந்தார்கள். மேலும் அல்லாஹ், அவர்களின் அந்தஸ்தை உயர்த்தினான் என்பதை திருமறையில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றான்:


(நபியே!) இவ்வேதத்தில் இத்ரீஸைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் ஸித்தீக்கான (மிக்க சத்தியவானான) நபியாக இருந்தார். மேலும், நாம் அவரை (இத்ரீஸ்) ஓர் உயரிய இடத்தில் உயர்த்தினோம். (19:56-57)


இத்ரீஸ்(அலை) அவர்கள் பொறுமையாளராய் திகழ்ந்தார்கள் என்பதை பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.


இன்னும் இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக) அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவர்களே! (21:85)


மிஃராஜ் பயணத்தில் 4-வது வானத்தில் இத்ரீஸ்(அலை)


ஹதிஸ் பின்வருமாறு:


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் இறை இல்லம் கஅபாவில் இரு மனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்த போது நுண்ணறிவாலும் இறை நம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. எனது நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஜம்ஜம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு (என் இதயம்) நுண்ணறிவாலும் இறை நம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும் கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான புராக் என்னம் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம். யார் அது என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல் (அலை) ஜிப்ரீல் என்று பதிலளித்தார். உங்களுடன் (வந்திருப்பவர்) யார் என்று கேட்கப்பட்டது. அவர் முஹம்மது என்று பதிலளித்தார். அவரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா? என்று கேட்கப்பட்டது. அவர் ஆம் என்றார். அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஆதம் (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அவர்கள் (என்) மகனும் இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக! எனச் சொன்னார்கள். பிறகு இரண்டாவது வானத்திற்கு நாங்கள் சென்றோம். யார் அது? என்று வினவப்பட்டது. அவர் ஜிப்ரீல் என்று பதில் அளிக்க, உங்களுடன் இருப்பவர் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் முஹம்மது என்று பதிலளித்தார். (அவரை அழைத்து வரும்படி அவரிடம் அனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஆம் என்று பதிலளித்தார். அவரது வரவு நல்வரவு ஆகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஈஸா (அலை) அவர்களிடமும் யஹ்யா (அலை) அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும் சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும் என்று சொன்னார்கள். பிறகு நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம். யார் அது? என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல் என்று பதிலளிக்கப்பட்டது. உங்களுடன் இருப்பவர் யார்? என்று கேட்கப்பட்டது. முஹம்மது என்று பதிலளித்தார். அவரை அழைத்து வரச் சொல்லி அனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. ஆம் என்று பதிலளித்தார். அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம். யார் அது? என்று கேட்கப்பட்டது. முஹம்மத் என்று பதிலளித்தார். (அவரை அழைத்து வரச் சொல்லி) ஆளனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. ஆம் என்று பதிலளித்தார். அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை நல்ல வருகை என்று வாழ்த்துச் சொல்லப்பட்டது. பிறகு நான் யூஸுஃப் (அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு ஸலாம் உரைத்தேன். அவர்கள் சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். யார் அது? என்று கேட்கப்பட்டது. முஹம்மது என்று பதிலளிக்கப்பட்டது. (அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. ஆம் என்ற பதிலளித்தார். அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது.


நான் இத்ரீஸ்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்குச் ஸலாம் உரைத்தேன். அவர்கள் சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். யார் அது? என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல் என்று பதிலளிக்கப்பட்டது. உங்களுடன் இருப்பவர் யார்? என்று கேட்கப்பட்டது. முஹம்மத் என்று பதிலளிக்கப்பட்டது. (அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. ஆம் என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் ஹாரூன் (அலை) அவர்களிடம் சென்றோம். நான் அவர்களுக்கு ஸலாம் உரைத்தேன். அவர்கள் சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று (வாழ்த்து) சொன்னார். பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். யார் அது என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல் என்று பதிளிக்கப்பட்டது. (அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆள் அனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. ஆம் என்று பதிலளிக்கப்பட்டது. அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) ஸலாம் உரைத்தேன். அவர்கள் சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று வாழ்த்தினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்ற போது அவர்கள் அழுதார்கள். நீங்கள் ஏன் அழுகிறீர்கள் என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர் இறiவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்திலிருந்து சொர்க்கம் புகுவார்கள் என்று பதிலளித்தார்கள். பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். யார் அது? என்று வினவப்பட்டது. ஜிப்ரீல் என்று பதிலளிக்கப்பட்டது. உங்களுடன் இருப்பவர் யார் என்று கேட்கப்பட்டது. முஹம்மது என்று பதிலளிக்கப்பட்டது. (அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) ஸலாம் உரைத்தேன். அவர்கள் மகனும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று சொன்னார்கள்.


பிறகு அல் பைத்துல் மஃமூர் எனும் வளமான இறை இல்லம் எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர் இது தான் அல் பைத்துல் மஃமூர் ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகின்றார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வர மாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகி விடும் என்று சொன்னார்கள். பிறகு (வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான) சித்ரத்துல் முன்தஹா எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள) ஹஜ்ர் எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. இதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போல் இருந்தன. (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ்,நைல் ஆகிய இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர்கள் உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும், யூப்ரடீஸ் நதியும் ஆகும் என்ற பதிலளித்தார்கள். பிறகு என் மீது ஐம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன.


நான் முன்னேறிச் சென்று இறுதியில் மூஸா (அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள் என்ன செய்தாய் என்று கேட்டார்கள். நான் என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள் எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிமாகத் தெரியும். நான் பனு இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்க மாட்டார்கள். ஆகவே உங்கள் இறைவனிடம் திரும்பச் சென்று அவனிடம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள் என்று சொன்னார்கள். நான் திரும்ப சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகு முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க இறைவன் அதை) முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போலவே நடக்க (அதை) இறைவன் இருபதாக ஆக்கினான். நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்ற போது அவர்கள் முன்பு போலவே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்து கேட்க) அவன் அதை ஐந்தாக ஆக்கினான். பிறகு நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்ன செய்தாய் என்று கேட்க அதை இறைவன் ஐந்தாக ஆக்கி விட்டான் என்றேன். அதற்கு அவர்கள் முன்பு சொன்னதைப் போலவே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டு விட்டேன் என்று பதிலளித்தேன். அப்போது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக) நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமுல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்கு பத்து நன்மைகளை நான் வழங்குவேன் என்று அறிவிக்கப்பட்டது. அறிவிப்பாளர் : மாலிக் இப்னு சஃசஆ, நூல் : புகாரி (3207)


படிப்பினை அல்லது சிந்தனை


1. பொறுமையாளர்களாயகவும் உண்மையாளர்களாகவும் இருப்பவர்களுக்கு நிச்சயமாக உயர்வே.


2. அல்லாஹ்வுக்கு கட்டுபட்டவர்களை அல்லாஹ் கண்ணியப்படுத்துகிறான்.