எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கிறோம். மூதூர் ஆன்லைன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது...

ஞாயிறு, மே 15, 2011

வீரம் மிக்க நாளைய சமூகத்தை உருவாக்க......



அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒரு நாள் நபியவர்களின் பின்னால் அமர்ந்திருந்தேன் அப்போது நபியவர்கள் சிறுவனே நான் உனக்கு சில வார்த்தைகளை கற்றுத் தருகிறேன் என்று சொல்லிவிட்டு கூறினார்கள். அல்லாஹ்வை நீ பேணிக்கொள் (பயந்து கொள்). அவன் உன்னை பாதுகாப்பான். அல்லாஹ்வை நீ பேணிக்கொள் (பயந்து கொள்) உனக்கு முன்னால் அவனை காண்பாய். நீ ஏதாவது கேட்டால் அல்லாஹ்விடமே கேள். நீ உதவி தேடினால் அல்லாஹ்வை கொண்டே உதவி தேடு. அறிந்து கொள் முழு சமூகமும் ஒன்று சேர்ந்து உனக்கொரு நன்மையான காரியத்தை செய்ய நாடினாலும் அதனை அல்லாஹ் உனக்கு விதித்திருந்தால் தவிர அவர்களால் எதுவும் செய்ய முடியாது. அவ்வாறுதான் முழு சமூகமும் ஒன்றிணைந்து உனக்கொரு தீங்கை விளைவிக்க முற்பட்டாலும் அல்லாஹ் உனக்கு அந்த தீமையை விதித்திருந்தாலே தவிர அவர்களால் அதனை செய்ய முடியாது. எழுது கோள்கள் உயர்த்தப்பட்டுவிட்டன. புத்தகங்கள் மூடப்பட்டுவிட்டன. இதழ்கள் காய்ந்துவிட்டன.

இந்த ஹதீஸை சற்று நன்கு கவனித்துப் பாருங்கள் இஸ்லாமிய உளவியலாலளர்கள் இந்த ஹதீஸை பற்றி குறிப்பிடும் போது இந்த ஹதீஸை நிச்சயம் ஒவ்வொரு இஸ்லாமிய சிறுவனின் மனதிலும் பதிக்க வேண்டும் என்கிறார்கள். அது மட்டுமல்ல இங்கே முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ஒரு கற்பித்தல் நுணுக்கத்தையும் எடுத்துக் காட்டுகிறார்கள். அதாவது இந்த ஹதீஸில் முதல் வார்த்தைகளை சற்று கவனியுங்கள். 'சிறுவனே நான் உனக்கு சில வார்த்தைகளை கற்றுத்தருகிறேன்'; என்று கூறுவதன் மூலம் நபியவர்கள் அந்த சிறுவனை விழித்துப் பேசுகிறார்கள். தொடர்ந்து முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

'அல்லாஹ்வை நீ பேணிக்கொள் (பயந்து கொள்). அவன் உன்னை பாதுகாப்பான். அல்லாஹ்வை நீ பேணிக்கொள் (பயந்து கொள்) உனக்கு முன்னால் அவனை காண்பாய்' இங்கு நபி(ஸல்) அவர்கள் ஒரு விடயத்தை செய்யும் படி கூறுகிறார்கள். அதனை இரு முறை கூறுவதன் மூலம் அதன் முக்கியத்துவத்தையும் அச்சிறுவனுக்கு உணர்த்துகிறார்கள். அது மட்டுமல்ல அதன் பிரதிபலனையும் கூறுகிறார்கள். சில இஸ்லாமிய உளவியலாளர்கள் இதனை விளக்கும் போது சிறுவர்களுக்கு ஒரு வேலையை செய்யும்படி ஏவினால் அதற்கு அவர்கள் ஏதாவது பிரதிபலனை எதிர்பார்ப்பது இயல்பு. அதனாலேயே நபியவர்கள் இப்படி கட்டளையையும் கூறி பிரதிபலனையும் கூறினார்கள் என்று கூறுகிறார்கள். மேலும் அந்த ஹதீஸிலே 'நீ ஏதாவது கேட்டால் அல்லாஹ்விடமே கேள். நீ உதவி தேடினால் அல்லாஹ்வை கொண்டே உதவி தேடு' என்னும் வசனங்கள் வருகின்றன இவ்வசனங்கள் மூலம் எந்த தேவையின் போதும் பிரச்சினையின் போதும் அல்லாஹ்விடமே நாம் உதவி தேட வேண்டும் என்பதை நபியவர்கள் அச்சிறுவனுக்கு உணர்த்துகிறார்கள். மேலும் தொடர்ந்து வரும் வசனங்கள் மிகவும் முக்கியமானவை அவையாவன 'அறிந்து கொள் முழு சமூகமும் ஒன்று சேர்ந்து உனக்கொரு நன்மையான காரியத்தை செய்ய நாடினால் அதனை அல்லாஹ் உனக்கு விதித்திருந்தால் தவிர அவர்களால் எதுவும் செய்ய முடியாது. அவ்வாறுதான் முழு சமூகமும் ஒன்றிணைந்து உனக்கொரு தீங்கை விளைவிக்க முற்பட்டாலும் அல்லாஹ் உனக்கு அந்த தீமையை விதித்திருந்தாலே தவிர அவர்களால் அதனை செய்ய முடியாது. எழுது கோள்கள் உயர்த்தப்பட்டுவிட்டன. புத்தகங்கள் மூடப்பட்டுவிட்டன.'


இஸ்லாமிய உளவியலாளர்கள் இந்த வசனத்தின் முக்கியத்துவத்தை கூறும் போது இந்த வசனங்கள் நிச்சயம் சிறுவர்களின் மனதி;ல் பதிக்கப்படவேண்டும். அப்படி பதிக்கப்பட்டால் அச்சிறுவன் எதற்கும் அஞ்சமாட்டான் தயங்கமாட்டான் உண்மையில் இது நபியவர்களின் காலத்து குழந்தைகளின் மனதில் ஆழமாக பதிந்திருந்தது ஆகவே தான் பெரிய யுத்தங்களில் சிறு வயது ஸஹாபாக்கள் கலந்து கொண்டார்கள். பத்ர் யுத்தத்தில் காபிர்களின் தளபதியை வீழத்தியதும் 10 வயது இரு சிறுவர்கள் தான். உண்மையில் இவர்களி;ன் துணிச்சலுக்கு அடிப்படை காரணம் இந்த ஹதீஸின் அடிப்படை கருத்துக்கள் அவர்களின் மனதில் ஆழமாக பதியப்பட்டிருப்பதுதான் என்று கூற முடியும்.

இந்த வசனங்களை நபியவர்கள் ஒரு சிறுவனுக்கு கூற காரணம் சிறுவர்களின் மனதில்
இந்த அடிப்படை நம்பிக்கைகள் பதியப்பட்டால் அவை வாழ் நாள் முழுதும் அவனில் பாதிப்பை ஏற்படுத்தும். எந்த துன்பம் கஷ்டம் வந்த போதும் அவன் விரக்தியடையமாட்டான். யார் அவனை அச்சுறுத்திய போதும் அவன் யாருக்கும் அஞ்ச மாட்டான். அவன் வீரமிக்கவனாக இருப்பான். அல்லாஹ்விடம் மட்டுமே அவன் உதவி தேடுவான். கத்ர் பற்றிய ஆழ்ந்த நம்பிக்கை அவன் மனதில் ஏற்படும்.

இன்று எங்கள் நாட்டை எடுத்துக் கொண்டால் பாடசாலை பருவ மாணவர்களிடையே தற்கொலை, விரக்தி, மன அழுத்தம், மனநோய்கள் போன்றன பெருகிக் கொண்டு வருகின்றன. உண்மையிலே இவற்றுக்கான சிறந்த தீர்வாக இந்த ஹதீஸ் அமைந்திருக்கிறது. இந்த கருத்து சிறுவர்களின் மனதில் பதியப்படுவதானது அவர்களின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வாகும் என்பது இஸ்லாமிய உளவியலாளர்களின் கருத்து.

உண்மையில் சிறுவர் மத்ரஸாக்களில்  முஸ்லிம் பாடசாலைகளில்  அஹதியாக்களில் இவ்வாறான ஹதீஸ்களை நாம் உரிய முறையில் கற்றுக் கொடுப்பதன் மூலம் எமது குழந்தைகளை வீரமிக்க அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்ட குழந்தைகளாக நம்மால் உருவாக்கலாம்.