எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கிறோம். மூதூர் ஆன்லைன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது...

புதன், நவம்பர் 09, 2011

ஈரான் மீது தாக்குதல் வேண்டாம் - எச்சரிக்கிறது ரஷ்யா



ஈரான் மீதான இராணுவ நடவடிக்கை மிகவும் பாரதூரமான அச்சம் தரும் விளைவுகளை கொண்டு வரும் என்றும் எதிர்வுகூற முடியாத ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்றும் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் எச்சரித்துள்ளார். ஈரானின் ஆயுத பிரச்சினைக்கு ராஜதந்திரம் மூலமான தீர்வு காணப்படவேண்டுமே தவிர எறிகணைத்தாக்குல் மூலமான தீர்வைக் காணமுடியாது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஈரான் மீதான தாக்குதல் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் என்று இஸ்ரேலின் ஜனாதிபதி ஷிமொன் பெறெஸ் தெரிவித்ததை அடுத்து ரஷ்யாவின் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரான் அணுவாயுத் திறனை இரகசியமாகப் பெற்றுள்ளதா என்பது பற்றி ஐநாவின் அணுவாயுதக் கண்காணிப்புக்குழு இவ்வாரம் தனது அறிக்கையை வெளியிடவிருக்கிறது.

நாளை செவ்வாய்க்கிழமையோ அல்லது புதன்கிழமையோ சர்வதேச அணுசக்தி ஏஜன்சி வெளியிடவிருக்கும் அறிக்கையில் ஈரானினால் மறுக்கமுடியாத அளவு சாட்சியங்கள் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. பொதுமக்களின் தேவைக்கான மின்சக்தியை உற்பத்தி செய்வதற்கான அணுசக்தி செயற்றிட்டத்தை மட்டும் தான் செயற்படுத்தி வருவதாக ஈரான் வலியுறுத்தி வருகின்றது.

அணுவாயுதங்கள் தயாரிப்பில் ஈரான் ஈடுபட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு பொய்யானது என்றும் தனது நாட்டுக்கு எதிராக பல்கோண அவமதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் அமெரிக்கா இதனை மேற்கொண்டு வருவதாகவும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அலி அக்பர் சலேஹி தெரிவித்துள்ளார்.