எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கிறோம். மூதூர் ஆன்லைன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது...

வியாழன், நவம்பர் 10, 2011

இஸ்ரேலை அழிப்போம்' - ஈரான் இராணுவ தளபதிகள் எச்சரிக்கை






ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு தொடர்பான சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் (ஐ.ஏ.இ.ஏ.,) அறிக்கை,  வெளியானது. இதையடுத்து, மத்திய கிழக்கில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள், ஈரான் மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன. அதேநேரம், ஐ.ஏ.இ.ஏ., அறிக்கையின் குற்றச்சாட்டுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஈரான், தனது அணுசக்தி உற்பத்தியை நிறுத்தப் போவதில்லை என உறுதியாகக் கூறியுள்ளது.

22 பக்க அறிக்கை: கடந்த ஒரு வார காலமாக, உலக நாடுகள் எதிர்பார்த்த, ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பு குறித்த ஐ.ஏ.இ.ஏ., அறிக்கை 
 வெளியானது. மொத்தம் 22 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை, தொழில்நுட்ப மொழியில் வறண்ட நடையில் எழுதப்பட்டுள்ளது.

சாராம்சம்: "ஈரான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே அணுகுண்டு தயாரிக்கும் தொழில்நுட்பத்தைப் பெற்று, தற்போது அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. அதோடு, அணு ஆயுதங்கள் தாங்கிச் செல்லக் கூடிய ஏவுகணைகளையும் தயாரிப்பதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டு விட்டது' என்பது தான் அந்த அறிக்கையின் சாராம்சம்.

ஆதாரம் என்ன? : இந்தக் குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரங்கள், ஐ.ஏ.இ.ஏ.,யின் உறுப்பு நாடுகள் மற்றும் ஈரானின் அணுசக்தி தொடர்பான அறிக்கை, ஐ.ஏ.இ.ஏ., ஈரானில் நேரில் நடத்திய ஆய்வுகள் ஆகியவற்றில் இருந்து பெறப்பட்டதாக ஐ.ஏ.இ.ஏ., கூறியுள்ளது.

அமெரிக்க கூட்டணி ஆலோசனை: ஏற்கனவே கடந்த சில நாட்களாக மிரட்டல் மேல் மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்த அமெரிக்கா, தற்போது ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அதிகரிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளும் இதில் சேர்ந்துள்ளன.

ஐரோப்பிய யூனியன், இந்த அறிக்கை குறித்து கவலை தெரிவித்துள்ளது. ஒட்டு மொத்தமாக இவை அனைத்தும் சேர்ந்து, ஈரான் மீது மேலும் கடினமான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளன.

ரஷ்யா எச்சரிக்கை: அதேநேரம், இந்த அறிக்கையின் தீவிரம் குறித்து கவலை தெரிவித்துள்ள ரஷ்யா, இதனால், ஈரான் உடனான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லாமல் போய் விடும் என்றும் கூறியுள்ளது.

என்ன செய்கிறது இஸ்ரேல்? : இந்நிலையில், இப்பிரச்னையின் மையமான இஸ்ரேல், ஈரான் மீதான தனது தாக்குதல் குறித்து ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் நேற்று முன்தினம், ராணுவ அமைச்சர், ராணுவ நடவடிக்கைகள் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என தெரிவித்தார்.

இஸ்ரேல் முன்னாள் ராணுவ அமைச்சர் ஷவுல் மொபாத், "ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் தூரத்திற்குள் ஐரோப்பா இருக்கிறது. ஈரான் ஐரோப்பா மீது தாக்குதல் நடத்தாது என்று யாராவது நினைத்தால் அது பெரும் தவறு' என்றார்.

ஈரான் பதிலடி: இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஈரான் பதிலளித்துள்ளது. ஐ.ஏ.இ.ஏ.,வுக்கான ஈரான் தூதர் அலி அஸ்கர் கூறியதாவது: ஐ.ஏ.இ.ஏ., தலைவர் யுகியா அமனோ, அபாயகரமான விளையாட்டை விளையாடுகிறார். அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தின் கீழ், ஈரான் தனது கடமையை என்றும் புறக்கணிக்காது. அமைதிப் பணிக்கான அணுசக்தி உற்பத்தியை ஈரான் தொடரும். இந்த அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பழையவை. இவற்றுக்கு ஈரான் ஏற்கனவே 117 பக்கத்தில் பதிலளித்துள்ளது. இந்த அறிக்கை, அமெரிக்கா மற்றும் மேற்குலகின் நிர்பந்தத்தால் உருவானது. அரசியல் உள்நோக்கம் உடையது. இவ்வாறு அஸ்கர் தெரிவித்தார்.

மேலும், ஐ.நா.,வில் உள்ள அணி சேரா இயக்க நாடுகளின் கூட்டத்தை நேற்று அவசரமாகக் கூட்டும்படி அவர் கோரிக்கை விடுத்தார். அந்தக் கூட்டத்தில், ஈரான் அணுசக்தி உற்பத்தி பற்றிய 20 முக்கிய கேள்விகளுக்கு அவர் விரிவாகப் பதிலளித்தார்.

அமெரிக்காவின் அணு ஆயுத தயாரிப்பு: ஈரான் அதிபர் காட்டம் : ஐ.ஏ.இ.ஏ., அறிக்கையால் காட்டம் அடைந்துள்ள ஈரான் அதிபர் அகமதி நிஜாத் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: தங்கள் உரிமையில் இருந்து ஒரு இம்மியளவு கூட ஈரானியர்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அணு ஆயுதங்கள் குவிந்துள்ள இந்த உலகில் ஒன்றிரண்டு அணுகுண்டுகளைத் தயாரிப்பது பெரிய விஷயமல்ல.

எங்களைப் பற்றி அறிக்கை கொடுக்கும் ஐ.ஏ.இ.ஏ., அமெரிக்க அணு ஆயுதத் தயாரிப்பு குறித்து அறிக்கை வெளியிடுமா? பண்பட்ட நாகரிகம் வாய்ந்த ஈரான், அணுகுண்டுகளைத் தயாரிக்க வேண்டிய அவசியமில்லை. அதேநேரம், அணு ஆயுதங்களால் தாக்குவோம் என்ற மிரட்டலுக்கும் ஈரானியர்கள் பயப்பட மாட்டார்கள்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், ஆயிரக்கணக்கில் குண்டுகளை வைத்துள்ளன. இன்றைய நவீன தொழில்நுட்பத்தோடு அவர்கள் குண்டுகளைத் தயாரிக்கின்றனர். அந்தக் குண்டுகள், உலகின் எந்தப் பகுதியையும் தாக்கும் திறன் கொண்டவை. இவ்வாறு நிஜாத் தெரிவித்தார்.

ஆனால், அவரது ராணுவத் தளபதிகள், "ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துமானால், அதன் பின் இஸ்ரேலே இருக்காது' என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

by yarlmuslim